உள்ளூர் செய்திகள்
தெலுங்கானா மாநில பட்ஜெட்டுக்கு அனுமதி கவர்னர் தமிழிசை தகவல்
சட்டமன்றத்தில் உரையாற்ற அழைக்காவிட்டாலும் தெலுங்கானா மாநில பட்ஜெட்டுக்கு அனுமதி வழங்கி உள்ளதாக கவர்னர் தமிழிசை கூறினார்.
புதுச்சேரி:
புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் கம்பன் கலையரங்கத்தில் சர்வதேச மகளிர் தின விழா இன்று நடந்தது. விழாவை கவர்னர் தமிழிசை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அன்பால் கென்னடி எம்.எல்.ஏ., அரசு செயலர் உதயகுமார் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பல்வேறு சாதனைகள் படைத்த பெண்களுக்கு பரிசுகளை வழங்கி கவர்னர் தமிழிசை பேசியதாவது:-
பெண் விடுதலை, பெண் உரிமை பற்றி பேசுகிறோம். நேற்று தெலுங்கானா மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கவர்னர் உரை இல்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். இதற்கு சட்டசபையை ஒத்தி தான் வைத்துள்ளோம். முடித்து வைக்கவில்லை என காரணம் கூறுகின்றனர். கவர்னர் உரையில்லாமல் பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம். ஆனால், கவர்னர் கையெழுத்து இல்லாமல் அரசியலமைப்பு சட்டப்படி பட்ஜெட் செயலுக்கு வராது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பேசப்பட்டது. இதனால் கவர்னர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்ற கேள்வியும் எழுந்தது. மக்கள் நலன் மட்டும்தான் முக்கியம். அன்று மாலையே பட்ஜெட்டில் கையெழுத்திட்டேன். இன்னா செய்தாரை ஒருத்தர், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்றும், பகைவனுக்கும் அருள்வாய் என முன்னோர்கள் கூறியுள்ளனர்.
அதுபோல புதுவை முதல்-அமைச்சர் அனுப்பும் கோப்புகளிலும் மக்கள் நலனை மட்டுமே முன்னிறுத்தி பார்க்கிறேன். பெண்களுக்கு முழு உரிமை கிடைத்துவிட்டதா? என்றால் இன்னும் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது. பெண்கள் இன்னும் தங்கள் நிலையில் இருந்து உயர வேண்டும். சொத்துரிமை கொடுத்துள்ளதுபோல, தொழில் தொடங்கவும் முன்னுரிமை அளித்துள்ள னர்.
இதனால் பெண்கள் தொழில் தொடங்க முன்வர வேண்டும். முன்னேற் றத்துக்கு முன்பாக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற வேண்டும். அதற்கான அதிகாரத்தை பெற பெண்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.