காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
- காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.
- பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது.
புதுச்சேரி:
காரைக்காலில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை, காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இதனை தடுக்க, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில், அந்தந்த போலீஸ் நிலைய போலீசார், தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு ஒரு சிலரை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், காரைக்கால் சமத்துவபுரம் பகுதியில், இளைஞர்கள் சிலர் கஞ்சா விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்.இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார், சமத்துவபுரம் பகுதிக்கு சென்றபோது, போலீசாரை பார்த்ததும், இளைஞர்கள் தப்பியோடினர். தொ டர்ந்து, அங்குள்ளோரிடம் விசாரணை நடத்தி தப்பிசென்ற தருமபுரம் செபஸ்தியார் கோவில் தெருவைச்சேர்ந்த ரவிராஜ்(வயது19), வில்பர்ராஜ்(23), ரஞ்சித்(23) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருது, ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.