ரெயில்வே ஊழியரை கடத்திய வழக்கில் 3 பேர் கைது
- கன்னியாகுடி ரெயில்வே கேட் பகுதிக்கு சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
- 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கன்னியாகுடி பகுதியில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றி வருபவர் கேரள மாநிலம் அயன்சேரி பகுதியை சேர்ந்த விஜின் (வயது 40).இவர் கடந்த 12-ம் தேதி தான் தங்கியுள்ள வைத்தீஸ்வரன் கோயில் பகுதியில் இருந்து கன்னியாகுடி ரயில்வே கேட் பகுதிக்கு பணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருப்புங்கூர் ரைஸ்மில் அருகே விஜின் சைக்கிளில் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் விஜினை வழிமறித்து அவரை மிரட்டி தங்களது வாகனத்தில் ஏற்றிக் கொண்டனர். அதில் ஒருவர் விஜினின் சைக்கிளையும் எடுத்துச் சென்றார். ஆள் இல்லாத காட்டுப் பகுதியில் விஜினை மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ 2 ஆயிரத்து 400 மற்றும் அவரது செல்போனை பிடுங்கி தங்களுக்கு போன் பே மூலம் பணம் செலுத்த சொல்லி மிரட்டி ரூபாய் 6 ஆயிரம் போன் பே செய்துக்கொண்டு சைக்கிளையும் எடுத்துக் கொண்டு தப்பி சென்றனர்.
இது குறித்து விஜின் வைத்தீஸ்வரன்கோயில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் வைத்தீஸ்வரன் கோயில் அருகே புலவனூர் பகுதியைச் சேர்ந்த கவியரசன்,அபிஷேக் மற்றும் கடலூர் தர்மநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் ஆகிய 3 பேரும் விஜினை கடத்தி சென்று வழிப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.