உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரிக்கு மும்பை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடத்தி வந்த 8 கிலோ கஞ்சா பறிமுதல்

Published On 2024-12-31 05:33 GMT   |   Update On 2024-12-31 05:33 GMT
  • முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.
  • கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை.

நாகர்கோவில்:

புனேவில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள யார்டுக்கு கொண்டு வரட்டது. அப்போது ரெயிலை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் பார்சல் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது காக்கி கவரில் 8 பார்சல் இருந்தது. இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்ஜெயபால், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் செரியன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கிடந்த பார்சலை கைப்பற்றினர்.

அந்த பார்சல்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் என்பதும், அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொட்டலங்களை நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 8 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் மதுவிலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

மதுவிலக்கு போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கஞ்சாவை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் திப்ரூகரில் இருந்து கன்னியாகுமரிக்கு வந்த ரெயிலில் கடத்தி வந்த 13 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில் தற்போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News