தமிழ்நாடு

கேஸ் டேங்கர் லாரி விபத்து- கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Published On 2025-01-03 02:27 GMT   |   Update On 2025-01-03 06:29 GMT
  • விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
  • விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையத்தில் உள்ள பழைய மேம்பாலம் நகரின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கி வருகிறது.

கோவை ரெயில் நிலையம் அருகே உள்ள இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக தான் ரெயில்கள் அனைத்தும் சென்று வரும். ரெயில்கள் எளிதில் சென்று வரும் வகையிலும், வாகனங்கள் அந்த இடத்தை கடந்து செல்லும் வகையிலேயே அந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

மேம்பாலத்தை சுற்றி நாலா புறமும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், ஆலயங்கள் என ஏராளமான உள்ளன. இந்த மேம்பாலத்தை தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன.

இந்தநிலையில் இன்று அதிகாலை 3.15 மணிக்கு கொச்சியில் இருந்து கோவைக்கு சமையல் கியாஸ் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி வந்தது. 18 டன் சமையல் கியாசை ஏற்றிக்கொண்டு வந்த அந்த லாரி, பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள கியாஸ் சிலிண்டர் பிரித்தனுப்பும் நிலையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தது.

உக்கடத்தில் இருந்து வந்த டேங்கர் லாரி அவினாசி சாலை மேம்பாலம் வழியாக வந்து மேம்பாலத்தை கடக்க முயன்றது. லாரி மேம்பாலத்தின் மத்தியில் உள்ள ரவுண்டானாவை சுற்றி வந்தது. அப்போது திடீரென லாரியில் ஆக்சில் துண்டாகி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது.

லாரியில் கியாஸ் நிரப்பப்பட்ட சிலிண்டர் டேங்கர் கழன்று தனியாக விழுந்தது. விழுந்த வேகத்தில் சிலிண்டரின் கியாஸ் கசிவு ஏற்பட்டது. லாரியை ஓட்டிய டிரைவர் கீழே குதித்து தப்பினார். இதுபற்றி விவரம் போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்றனர். கியாஸ் கசிந்து கொண்டே இருந்ததால் பதட்டம் ஏற்பட்டது. சிறு தீக்கங்கு அங்கு விழுந்ததாலோ, சூரிய ஒளி பட்டு விட்டாலோ டேங்கர் வெடித்து பெரும் சேதம் ஏற்படும் அபாயம் நிலவியது.

இதனால் முதற்கட்டமாக சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவை நிறுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன. மாநகராட்சி சார்பில் தண்ணீர் லாரிகள் வரவழைக்கப்பட்டன. கியாஸ் டேங்கரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அதனை குளிர்விக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் ஆகியோர் நேரில் வந்து பணிகளை துரிதப்படுத்தினர். 4 மணி நேர போராட்டத்துக்கு பின் டேங்கர் லாரியில் ஏற்பட்ட கசிவை ஊழியர்கள் நிறுத்தினர்.

மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக மேம்பாலத்துக்குள் பொதுமக்கள் யாரும் வராமல் இருக்க நாலாபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டன. அனைத்து வாகனங்களும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. பாலத்தை சுற்றி ஒரு கிலோ மீட்டர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உஷார்படுத்தப்பட்டனர். 500 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி அந்த பகுதியில் உள்ள 37 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

இதற்கிடையே விபத்துக்குள்ளான டேங்கரில் கியாசை பத்திரமாக மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக திருச்சியில் இருந்து மீட்பு டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு உள்ளது. அந்த லாரியில் விபத்துக்குள்ளான டேங்கரில் இருந்து கியாசை நிரப்பி அப்புறப்படுத்த ஏற்பாடுகள் நடந்தது.

இந்த சம்பவம் கோவையில் இன்று பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். டேங்கர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தென்காசியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News