உள்ளூர் செய்திகள்

புதுச்சத்திரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 25 பேர் காயம்

Published On 2025-01-05 05:20 GMT   |   Update On 2025-01-05 05:20 GMT
  • தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
  • 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

ராசிபுரம்:

புதுச்சத்திரம் அருகே உள்ள நவனி தோட்டக்கூர்பட்டி ஊராட்சியிலுள்ள பள்ளிப்பட்டி மற்றும் ஓலப்பாளையம் கிராமங்களை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம் சென்றனர். அவர்களுடன் ராசிபுரத்தை சேர்ந்த 10 பேரும் மேல்மருவத்தூர் சென்றுள்ளனர்.

பின்னர் வழிபாடு செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். ராசிபுரத்தை சேர்ந்தவர்களை இறக்கிவிட்டு விட்டு, அதிகாலை 4 மணியளவில் நவனி தோட்டக்கூர்பட்டி பஸ் நிறுத்தம் அருகே உள்ள லக்கியம்பட்டி பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது தனியார் பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சுமார் 10 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில் ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனாம்பாள் (37), சுவேதா(15), விசாகா (8), ஜெகதீஸ்வரி (40), பாப்பாத்தி (70), தமிழ்ச்செல்வி (31) ஆகியோர் உட்பட 25-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்தனர். பஸ் பள்ளத்தில் கவிழ்ந்த தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டனர்.

பின்னர் காயமடைந்தவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் மற்றும் நாமக்கல்லில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.


மேலும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். வளைவு பகுதியில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்தவர்களுக்கு ராசிபுரம் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News