சட்டசபை கூட்டம் 5 நாட்கள் நடைபெறும்- சபாநாயகர் அறிவிப்பு
- இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திலும் இப்படியான பிரச்சனை இல்லை.
- கவர்னர் அரசு தரப்பில் கொடுத்ததை வாசிக்க வேண்டும்.
சென்னை:
தமிழக சட்டசபையின் அலுவல் ஆய்வு குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு அறையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 11-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. நாளை (7-ந்தேதி) சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மறைவு குறித்து இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் கொண்டு
வரப்படுகிறது. அத்துடன் நாளைய சபை ஒத்தி வைக்கப்படுகிறது.
அதன்பிறகு 8-ந்தேதி (புதன்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப் பெற்று விவாதம் நடத்தப்படும். 9, 10-ந்தேதிகளிலும் விவாதம் நடைபெறும். 11-ந்தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலுரை இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கிறார். அரசினர் சட்ட முன்வடிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
சட்டசபையில் கவர்னர் தனது உரையை வாசிப்பதும், வாசிக்காமல் இருப்பதும் அவரது விருப்பம். சட்டசபையை பொருத்தவரை மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து வேறு யாருக்கும் அவையில் கருத்து தெரிவிக்க அனுமதி இல்லை.
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளிலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படுகிறது. சட்டசபையிலும் மரபுபடி தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படுகிறது. கவர்னருக்காக மரபை மாற்ற முடியாது. அடுத்த முறையும் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படும். கவர்னர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி இருக்க வேண்டும்.
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் எந்த மாநிலத்திலும் இப்படியான பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டில் கவர்னர் வேண்டுமென்றே இப்படி செய்கிறார். கவர்னர் அரசு தரப்பில் கொடுத்ததை வாசிக்க வேண்டும். ஆனால் சாக்கு போக்குக்காக தேசியகீதம் முதலில் பாடப்படவில்லை என்று கூறுகிறார். நாங்கள் கவர்னர் மாளிகைக்கு சென்று சட்டசபையில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுத்தபோது எங்களிடம் அவர் சந்தோஷமாகத்தான் பேசினார்.
இவ்வாறு அவர் கூறினார்.