பழனியில் பாதயாத்திரை பக்தர்கள் வருகை அதிகரிப்பு
- அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.
- மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், வைகாசி விசாகம், பங்குனி உத்திரம் என வருடம் முழுவதும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். இங்கு குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் இருந்தும் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள் ஆன்மீக பயணமாக பழனி கோவிலுக்கும் வருகின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அடிவாரம், பஸ்நிலையம், கிரிவீதி, மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையம், படிப்பாதை, யானைப்பாதை உள்ளிட்ட இடங்களில் அதிக அளவு பக்தர்கள் கூடினர்.
மேலும் மலைக்கோவிலில் நீண்டநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் வருகையால் அடிவார பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்பட்டது. இதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
தைப்பூசத்தையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தற்போது பாதயாத்திரையாக பக்தர்கள் வரத்தொடங்கியுள்ளனர். அவர்கள் கிரி வீதியில் உற்சாகமாக ஆடிப்பாடி காவடி எடுத்து மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
இனி வரும் காலங்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் சாலைகளில் பாதுகாப்பு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.