ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் தீ விபத்து- நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல்
- ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
- தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிநோயாளிகளாக தினமும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 மாடி கட்டிடம் பல்வேறு சிகிச்சை பிரிவுகளுக்காக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் 2-வது மாடியில் பேட்டரி, இன்வெர்ட்டர் வைக்கப்பட்டு இருந்த அறையில் திடீரென தீப்பிடித்தது. ஒயர்களில் தீப்பற்றி மளமளவென தீ பரவிக்கொண்டே சென்றது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடும் புகைமூட்டம் ஏற்பட்டது.
உடனே 2-வது தளத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உடனடியாக அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். புகை மூட்டத்தில் சிக்கிய சில நோயாளிகள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
புகைமூட்டம் 3-வது மற்றும் 4-வது தளங்களுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்தவர்களும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். முண்டியடித்துக் கொண்டு ஓடியதால் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி முழுவதும் இருள் சூழ்ந்தது. தீயணைப்பு வீரர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்களுடன் இணைந்து செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்தனர். மறுபுறம் தீயை அணைக்கும் பணியும் தீவிரமாக நடந்தது.
சம்பவம் குறித்து அறிந்த ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். அதிரடிப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டு, துரிதமாக செயல்பட்டு ஆஸ்பத்திரியில் இருந்தவர்களை வெளியே கொண்டு வந்தனர்.
சற்று நேரத்தில் தீ மற்றும் புகை பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர். அதன்பின்னரே அனைவருக்கும் நிம்மதி ஏற்பட்டது.
பேட்டரி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் புகைமூட்டம் வெளியேற நேரமானதால் அந்த பகுதிகளில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து புகையை வெளியேற்றினர்.
இதுகுறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ் ஆகியோர் கூறுகையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தானியங்கி தீயணைப்பான் உடனடியாக இயங்கியதால் பெரும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. மீட்பு படையினரும் தீயை வேகமாக கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்துவிட்டனர். நோயாளிகள் மாற்று இடத்திற்கு உடனடியாக கொண்டு சேர்க்கப்பட்டனர் என்றனர்.
இந்த தீவிபத்தில் ஆஸ்பத்திரியில் இருந்த பல்வேறு உபகரணங்கள், மின்சாதனங்கள் சேதம் அடைந்துள்ளன. குறிப்பாக இன்வெர்ட்டர் அறையில் இருந்த 25-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் கருகிவிட்டன. சேத விவரம் குறித்து விசாரணை நடத்து வருகிறது.