தியாகதுருகம் அருகே இளம்பெண்ணை தாக்கிய 4 வாலிபர்கள் மீது வழக்கு
- இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார்.
- அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே புது உச்சிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையன் மனைவி ஜோதி (வயது 30). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முனியப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றார். அப்பொழுது அங்கிருந்த அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்கள் சுரேந்திரன், வேலுமணி, ரத்தினன் மகன் ரமேஷ், சாமிதுரை மகன் செல்லமுத்து ஆகியோர் ஜோதியை பார்த்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டு கொள்ளாமல் அவர் வீடு திரும்பினார்.
ஆனால், 4 பேரும் ஜோதியை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர், அவரது வீட்டுக்கு சென்று ஜோதியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அப்போது ஜோதியின் கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் என தெரிகிறது. இது குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.