உள்ளூர் செய்திகள்

தவளகிரீஸ்வரர் மலையில் பற்றி எரியும் தீ

Published On 2024-05-10 10:02 IST   |   Update On 2024-05-10 10:02:00 IST
  • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
  • செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் 1,440 அடி உயரம் கொண்ட ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலை உள்ளது.

இந்த மலையின் உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். பவுர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

இந்த மலை முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், பல வகையான உயிரினங்கள் உள்ளன. தினந்தோறும் மூலிகைகளை பறித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சமூக விரோதிகள் சிலர் மலை மீது தீ வைத்தனர். இதனால் மலையை சுற்றி காட்டுத்தீ மளமளவென எரிய தொடங்கியது. மலையில் இருந்த அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள் மற்றும் உயிரினங்கள் தீயில் எரிந்து நாசமானது. சுற்றியுள்ள பகுதிகளில் இரவு முழுவதும் தீ எரிந்து கொண்டு இருந்ததால் புகை மூட்டம் காணப்பட்டது.

இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News