சட்டசபை தேர்தலுக்கு முன்பு அதிரடி: தி.மு.க. முறைகேடுகள் பற்றி பட்டியல் தயாரிக்கும் அண்ணாமலை
- தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது.
- தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு.
சென்னை:
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடந்த 2023-ம் ஆண்டு முதல் அவ்வப்போது தி.மு.க. அரசில் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு வருகிறார்.
இந்த பைல்ஸ் வெளியாகும் போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பும்.
முதல் முதலில் 2023 ஏப்ரல் 14-ல் தி.மு.க. பைல்ஸ் முதல் பாகத்தை வெளியிட்டார். அதில் தி.மு.க. எம்.பி.ஜெகத்ரட்சகன், அமைச்சர் துரைமுருகன் மற்றும் முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்ட சிலரது சொத்துப் பட்டியல் இடம் பெற்று இருந்தது.
அதே ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் பாகத்தை வெளியிட்டார். அதில் அரசு துறைகளில் ஒப்பந்த பணிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து டி.ஆர்.பாலு எம்.பி., முன்னாள் டி.ஜி.பி. ஜாபர் சேட் பேசிய தொலை பேசி உரையாடல் மற்றும் ஜாபர் சேட்டும், ஆ.ராசாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் பற்றிய ஆடியோக்களை வெளியிட்டார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4-வது ஆடியோவை வெளியிட்டார். அதில் ஆ.ராசாவும் ஜாபர்சேட்டும் பேசிய உரையாடல் இடம் பெற்று இருந்தது.
ரெய்டு பற்றியும் தகவல் முன்கூட்டியே பகிரப்பட்டதால் 2 ஜி வழக்கின் அனைத்து முக்கிய ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
சொத்து பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து அவர் மீது டி.ஆர்.பாலு அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜரானார்.
இதற்கிடையில் 3 மாதங்கள் வெளிநாட்டுக்கு மேல்படிப்புக்கு சென்றிருந்த அண்ணாமலை திரும்பி வந்த பிறகு மீண்டும் தனது அதிரடி அரசியலை தொடங்கியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அதானி விவகாரத்தில் ரூ.568 கோடி லாபம் ஈட்ட அதானி நிறுவனத்துக்கு ஆதரவாக கொள்கை முடிவையே மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் தி.மு.க.வின் 3-வது பைலை வெளியிட அண்ணாமலை தயாராகி வருகிறார். குறிப்பிட்ட சில துறைகளில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை அண்ணாமலை திரட்டி வருவதாக கூறப்படுகிறது.
அவைகளை மையமாக வைத்து தி.மு.க. பைல்ஸ் -4ஐ தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.
பனையூரில் இதுபற்றி அவர் கூறும்போது, தி.மு.க. பைல்ஸ்-1 மற்றும் 2ஐ வெளியிட்டோம். இப்போது 3-வது பகுதி பெரிய அளவில் தயாராகி வருகிறது.
இந்த முறை கூட்டணி கட்சிகளையும் தப்பிக்க விட மாட்டோம். ஏனெனில் பல டெண்டர்களை கூட்டணி கட்சியினரே எடுத்துள்ளார்கள்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் எவ்வளவு டெண்டர்கள் விடப்பட்டது? அது யார் யாருக்கு போய் உள்ளது. அதை எடுத்த நிறுவனங்கள் எது? அந்த நிறுவனங்களுக்கும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தொடர்பு...?
அதாவது அந்த நிறுவனங்களை நடத்துவதே அவர்களின் மாமன், மச்சான் என்று ஏதாவது ஒரு உறவினராகத்தான் இருப்பார். இவ்வளவு கோடி டெண்டர்கள் கடைசியாக உள்ளூர் அமைச்சரின் உறவினருக்குத் தான் போய் இருக்கிறது.
எனவே முழு அளவில் ஆதாரங்களை திரட்டி தயார் செய்கிறோம். இதுவரை வெளியிட்ட பைல்களை விட மக்கள் மத்தியில் இனி வெளிவரும் 'பைல்' பெரிய அளவில் பேசப்படும். இந்த புதிய பைல் 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளிவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.