அ.தி.மு.க.வில் அதிக இளைஞர்களை சேர்க்க நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும்- வேலுமணி
- உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவம் வழங்கும் நிகழ்ச்சி இன்று தனியார் ஓட்டலில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சீனிவாசன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் உதயகுமார், அமைப்புச் செயலாளர் மருதராஜ், பாசறை செயலாளர் பரமசிவம், முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெரியபுல்லான், மாணிக்கம், தென்னம்பட்டி பழனிச்சாமி, பிரேம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:-
கடந்த 3½ ஆண்டுகளில் மக்களுக்கு தேவையான எந்தவித நலத்திட்டங்களையும் செயல்படுத்தாத நிர்வாக திறனற்ற அரசாக தி.மு.க. உள்ளது. இதனால் மக்கள் தெளிவாக முடிவெடுத்து விட்டனர்.
அரசு ஊழியர்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தி.மு.க.விற்கு எதிராக வாக்களிக்க உள்ளனர். எனவே வருகிற 2026-ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவது உறுதி.
எனவே கட்சியில் அதிகப்படியான இளைஞர்களை சேர்த்து தீவிர களப்பணியாற்ற வேண்டும். அ.தி.மு.க. மக்களுக்கான இயக்கம் என்பதை உணர்த்த வருகிற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது,
தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. மக்கள் விரும்பும் தலைவர்களாக எம்.ஜி.ஆர், ஜெயலலிதா விளங்கினர். அவர்களது வழியில் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான ஆட்சியை கொடுத்தார். எனவே மீண்டும் அவரை முதலமைச்சராக பதவியில் அமர்த்த கட்சியினர் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேசியதாவது,
கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்தோம். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதுபோன்று ஏற்பட்டு விடாமல் தீவிர களப்பணியாற்ற வேண்டும் மேற்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும். இதேபோல் அனைத்து தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையுடன் உழைத்தால் 100 சதவீத வெற்றி உறுதி. அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாக சீர்கேடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஆகியவற்றை கண்டித்து விரைவில் அ.தி.மு.க. போராட்டம் நடத்தும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், பகுதி செயலாளர்கள் மோகன், சுப்பிரமணி, சேசு, முரளி, இளைஞரணி செயலாளர் ராஜன், சார்பு அணி நிர்வாகிகள் ஜெயபாலன், ஜெயராமன், திவான்பாட்சா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், ரவிக்குமார், பிரபு, லெனின், திண்டுக்கல் கிழக்குப்பகுதி பேரவை செயலாளர் வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.