மேலூர் அருகே 48 கிராம மக்கள் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா
- உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்
- அ.வள்ளாலப்பட்டி கிராமத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கிறார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்துக்கு உட்பட்ட அரிட்டாபட்டி மற்றும் மதுரை கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட மீனாட்சிபுரம் ஆகிய கிரா மங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பள உள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறி வித்தது.
தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமான இந்த பகுதிகள் கழுகுமலை, கழிஞ்சமலை, நாட்டார்மலை, ராமாயி மலை, ஆப்டான் மலை, தேன்கூடு மலை, கூகைகந்தி மலை ஆகிய 7 சிறிய குன்றுகளை கொண்டுள்ளது.
அதேபோல் 2,200 ஆண்டுகளுக்கு முந்தய தமிழி கல்வெட்டுகள், சமணர் படுகைகள், சங்ககால கற்ப டுக்கைகள், குடைவரைக் கோவில்கள் என தனித்துவமான அடையாளங்களும் அரிட்டாபட்டியில் அமைந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரால் இப்பகுதியில் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டு முழுவதும் ஒருபோக பாசன விவசாயமும் நடைபெறுகிறது.
இந்தநிலையில் மேலூர் வட்டத்தில் உள்ள நாயக் கர்பட்டியை மையமாக கொண்டு அந்த பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கனிமவளம் எடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்துக்கு அரிட்டாபட்டி சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியானது.
அரிட்டாபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள தெற்குத் தெரு, முத்து வேல்பட்டி, குளனிப்பட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளாளப்பட்டி, சிலீப்பியாபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி, செட்டியார்பட்டி, சண்முகநாதபுரம் என 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பகுதியில் இந்த திட்டத்தை அமல்படுத்த வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்துள்ளது.
இது தொடர்பான அறி விப்பை மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் கடந்த ஆண்டு நம்பவர் 7-ந்தேதி வெளியிட்டது. இதனால், அதிருப்தியடைந்த மேலூரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், பெண்கள், கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஜனவரி 7-ந்தேதி நடைபெற்ற பிரமாண்ட போராட்டத்தில் மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேர வையில் டிசம்பர் 9-ந்தேதி தமிழக அரசு சிறப்பு சட்ட மன்றத்தை கூட்டி அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியது.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நான் முதலமைச்சராக இருக்கும் வரை நிச்சயமாக டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்கமாட்டேன் என சூளுரைத்தார்.
இருந்தபோதிலும் மத்திய அரசு இந்த திட்டத்தை ரத்து செய்யாமல் அரிட்டாபட்டி பல்லுயிர் சூழல் தளத்திற்கு உட்பட்ட 500 ஏக்கர் நிலத்தை தவிர மீதமுள்ள 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலத்தில் சுரங்கம் அமைக்கப்படுவதற்கு இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் மறுவரையறை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. எனவே பொது மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்தநிலையில் டெல்லி சென்ற போராட்டக் குழுவி னர், டங்ஸ்டன் கனிம சுரங்கத்தால் மேலூர் வட்டத்தில் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகளையும், விவசாயிகள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும், நிலத்தடி நீர் சீர்கேட்டையும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டியிடம் விளக்கி கூறினர். இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர். நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை 11 கிராம மக்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அத்திட்டம் ரத்து செய்யப்பட காரணமாக இருந்தமைக்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இன்று அரிட்டாபட்டியில் முதல்-அமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாகவும், அதற்கு வருகை தரும்படியும் பொதுமக்கள் அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் அன்பை ஏற்க நாளை அரிட்டாபட்டிக்கு வருகிறேன்," என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி இன்று சென்னையில் குடியரசு தின விழாவை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதியம் 1.10 மணிக்கு மதுரை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் வரவேற் கிறார்கள். பின்னர் தனியார் ஓட்டலில் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 4.30 மணிக்கு காரில் மேலூர் செல்கிறார்.
தொடர்ந்து அரிட்டாபட்டி கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் நடைபெறும் பாராட்டு விழா கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து அ.வள்ளாலப்பட்டி கிராமத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கிறார்.
48 கிராம மக்கள் ஒருங்கிணைந்து நடத்த இருக்கும் இந்த பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கும் நிலையில் அவரை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.