தமிழ்நாடு

வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையின் கதை, வசனத்தை மக்கள் நம்பமாட்டார்கள்- அண்ணாமலை

Published On 2025-01-26 14:44 IST   |   Update On 2025-01-26 14:44:00 IST
  • பிரதமர் மோடி திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார்.
  • தி.மு.க. என்றாலே நாடக கம்பெனிதான்.

திருப்பூர்:

திருப்பூர் கணக்கம்பாளையத்தில் காமராஜர் கலாம் அறக்கட்டளை சார்பில் 1330 திருக்குறளையும் 1330 மாணவ, மாணவிகள் மழலை மொழியில் கூறி உலக சாதனை படைக்கும் திருக்குறள் உலக சாதனை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

76-வது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம், பெரியவர்கள் உலகம் என இரண்டு உள்ளது. குழந்தைகள் சூழ்ந்திருக்கும் உலகம் அன்பு நிறைந்த உலகம். 1330 குழந்தைகள் மட்டுமல்ல. தந்தை, தாய், பாட்டி, தாத்தா என அனைவரின் சான்றாக ஒரு குழந்தை வந்துள்ளது.

திருக்குறள் குறித்து எவ்வளவு பேசினாலும் பத்தாது. உலகத்தில் எல்லோரும் திருக்குறளை வாழ்வியல் பொதுமறை நூலாக பார்க்கின்றனர். உங்கள் வாழ்வின் பிரச்சனைகளுக்கான தீர்வு திருக்குறளில் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று குடியரசு தினம். நம்மை நாம் எப்படி பாதுகாப்பது என அரசியலமைப்பு சட்டமாக தொகுத்து நமக்கு நாமே வழங்கிய நாள் குடியரசு தினம். மகாத்மா காந்திக்கு லியோ டால்ஸ்டாய் எழுதிய கடிதத்தில் திருக்குறளை மேற்கொள் காட்டி உள்ளார். திருக்குறள் என்ற வார்த்தைக்கு பதிலாக இந்து குறள் என சொல்லி உள்ளார். பிரதமர் மோடி திருவள்ளுவரை உலகம் முழுவதும் கொண்டு செல்கிறார். உலக திருவள்ளுவர் கான்பரன்ஸ் டெல்லியில் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,

தி.மு.க. என்றாலே நாடக கம்பெனிதான். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக காவல்துறை எழுதியுள்ள வசனம், திரைக்கதை கருணாநிதி எழுதுவதை மிஞ்சும் அளவிற்கு உள்ளது. இத்தனை நாட்கள் இல்லாத ஆடியோ வீடியோ வெளியே வருகிறது. இதனை மக்கள் நம்ப மாட்டார்கள். இது தி.மு.க. எழுதியுள்ள கதை, வசனம். ஏன்? சி.பி.ஐ. விசாரணையை தடுக்கிறீர்கள். கூட்டணி கட்சிகளே இதனை ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.

நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கருத்துக்கு, நயினார் நாகேந்திரனுக்கு ரெய்டு விட அதிகாரம் இல்லை என பதில் அளித்தார். 

Tags:    

Similar News