சேலம் மாவட்டத்தில் பனிப்பொழிவு மீண்டும் அதிகரிப்பு: பொதுமக்கள் தவிப்பு
- பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
- கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்ததால் குளிரின் தாக்கம் சற்று குறைந்தது.
குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது.
இதனால் அங்கு வசிக்கும் மக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடாமாடுகின்றனர்.
இந்த குளிர் காலை 11 மணி வரை நீடிப்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் தவித்து வருகிறார்கள்.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது.
இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் நடுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடும் குளிர்சியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பொதுமக்கள் காலை நேரங்களில் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் நேற்று குளிரின் தாக்கம் சற்று அதிகரித்தது. இன்று மேலும் பனிப்பொழிவு அதிகரிப்பால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது.
இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்தி விட்டு போர்வைகளை போர்த்திய படியே பொது மக்கள் தூங்கும் நிலை ஏற்பட்டது. இன்று அதிகாலை முதல் 9 மணி வரை குளிரின் தாக்கம் இருந்ததால் இரு சக்கர வாகனங்களில் வெளியில் சென்றவர்கள் கடும் குளிரால் நடுங்கும் நிலையே நீடித்தது.