வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்
- யானை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது.
- வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஈட்டியார் எஸ்டேட் உள்ளது.
இந்த பகுதியையொட்டி வனப்பகுதி உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்புக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக யானைகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து வருகிறது.
சம்பவத்தன்று இரவு வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஈட்டியார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. குடியிருப்பு பகுதியில் வெகுநேரமாக சுற்றிய காட்டு யானை, அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே சென்றது.
அங்கு ரேஷன் கடையின் கதவை உடைத்து தள்ளியது. இந்த நிலையில் ரேஷன் கடையில் இருந்து சற்று தொலைவில், அன்னலட்சுமி (67) என்ற மூதாட்டியின் வீடு உள்ளது.
இரவு நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டதால் அன்னலட்சுமி, கதவை திறந்து வெளியில் வந்து பார்த்தார். அப்போது யானை நின்று கொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் அங்கிருந்து ஓட முயன்றார்.
ஆனால் யானை அவரை துரத்தி சென்று, கீழே தள்ளி காலால் மிதித்தது. இதில் மூதாட்டி இடுப்பு பகுதியில் பலத்த காயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்கள் அங்கு நின்றருந்த யானையை சத்தம் போட்டு காட்டுக்குள் விரட்டினர். பின்னர், காயம் அடைந்த மூதாட்டி அன்ன லட்சுமியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மானாம்பள்ளி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காயம் அடைந்த அன்னலட்சுமிக்கு, மானாம்பள்ளி வனத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சைக்காக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.