இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
- சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி தொடங்கி பூதங்குடி வரை பரந்து விரிந்து காணப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும், மழை காலங்களில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கால்ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக ஏரிக்கு நீர்வரும். இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவையையும் தீர்த்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருவமழையால் பெய்த கனமழை காரணமாக வீராணம் ஏரியின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெள்ளியங்கால் ஓடை மற்றும் வீராணம் வடக்கு நீர் போக்கி மூலமாக வெளியேற்றப்பட்டு, ஏரியில் நீர்மட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கொள்ளிடம் வடவாற்றில் இருந்தும், மழைநீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடிக்கு தற்போதைய நிலவரப்படி 47.40 அடியை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் தேவைக்காக 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வடவாறு வழியாக வினாடிக்கு 1330 கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.