போலீஸ் சீருடையில் இணையத்தை கலக்கும் டி.ஐ.ஜி. தம்பதி
- சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் படங்கள் பதிவிடுவது வழக்கம்.
- இந்த தம்பதியை பின்பற்றுபவர்கள் இவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.
திருச்சி:
திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணிபுரிந்து வருபவர் வருண்குமார். இவரது மனைவியான வந்திதா பாண்டே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வருகிறார். ஐ.பி.எஸ். தம்பதியான இவர்கள் இருவரும் கடந்த டிசம்பர் மாதம்தான் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்ற நிலையில் இருந்து டி.ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றனர்.
இவர்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வீடியோ மற்றும் படங்கள் பதிவிடுவது வழக்கம். அந்தவகையில் நாட்டின் 76-வது குடியரசு தின விழாவையொட்டி நேற்று வந்திதா பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை 'ரீல்ஸ்' ஆக பதிவிட்டு உள்ளார்.
அதில் மாவட்ட கண்காணிப்பாளர் பதவியில் இருந்து சரக துணைத்தலைவர் பதவிக்கான அந்தஸ்து உயர்வின்போது தங்களது சீருடையில் ஸ்டார் மற்றும் அசோக சக்கர முத்திரை அடையாளங்களை ஒருவருக்கொருவர் மாற்றி அணிவிக்கும் காட்சிகள் பின்னணி இசையுடன் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தள பதிவுகளில் இந்த தம்பதியை பின்பற்றுபவர்கள் இவர்களை வாழ்த்தியும், பாராட்டியும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். அதிகார இணையர் (பவர் கப்பிள்), உங்களது சேவை நாட்டிற்கு தேவை என்றெல்லாம் 'கமெண்ட்ஸ்' குவிந்து வருகிறது.