உள்ளூர் செய்திகள்

அன்னங்காரம்பேட்டையில் பஸ் போக்குவரத்து நிறுத்தம்

Published On 2022-10-20 07:03 GMT   |   Update On 2022-10-20 07:03 GMT
  • அன்னங்காரம்பேட்டையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது
  • தரைப்பாலம் மூழ்கியதால்

அரியலூர்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் சிந்தாமணி காட்டாற்று ஓடையில் இருந்தும் வரும் தண்ணீர் குறிச்சி கலிங்கு வழியாக பூவாய் மண்டபம் என்று அழைக்கப்படும் கோடாலி கருப்பூர் 7 கண் மதகு வழியாக கொள்ளிடம் ஆற்றில் கலப்பது வழக்கம். இந்த 7 கண் மதகில் முதல் மதகின் கதவு உடைந்தது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் வடிகால் ஓடையில் தண்ணீர் புகுந்தது. சிறிது சிறிதாக வெள்ள நீர் கோடாலிகருப்பூர், அன்னங்காரம்பேட்டை, கீழக்குடி காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நெல் வயல்களில் வெள்ள நீர் பாய்ந்து ஓட தொடங்கியது.

இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் முற்றிலும் மூழ்கின. இதையடுத்து மதகை சரி செய்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பல்வேறு வழிகளில் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன.

புதிதாக கதவு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் கதவு தயாரிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை பழுதடைந்த கதவை அகற்றிய பிறகு பொருத்த முடியும் என்பதால் பழைய உடைந்த கதவை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. வெள்ள நீர் தா.பழூர் ஒன்றியத்தின் தாழ்வான பகுதியாக கருதப்படும் அன்னங்காரம்பேட்டை கிராமத்தை சூழ்ந்துள்ளது.

தா.பழூரிலிருந்து அன்னங்காரம்பேட்டை செல்லும் சாலையில் உள்ள வட்டார வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்ல தொடங்கி உள்ளது. இதனால் பெட்டாற்றில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம் முற்றிலும் மூழ்கி விட்டது. இந்தப்பாலத்தின் வழியாக பஸ் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.

Tags:    

Similar News