நிரம்பிய தொப்பையாறு அணை திறக்கப்படும் நிலையில் பாசன கால்வாய்கள் முன்கூட்டியே தூர்வாரப்படுமா? -விவசாயிகள் எதிர்பார்ப்பு
- அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- விவசாய நிலங்கள் முழுமையாக பயன் அடையும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தொப்பையாறு அணை 50 அடி உயரம் கொண்டது. தருமபுரி மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஏற்காடு பகுதிகளில் கடந்த மாதங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததையடுத்து அணை முழு கொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து நேற்று முதல் தேதி அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தொப்பையாறு அணைக்கு நீராதாரமாக தருமபுரி மாவட்ட பகுதிகள் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் ஏற்காடு மலையிலிருந்தும் ஆறுகள் வழியாக ஆனை மடுவு, ராமமூர்த்தி நகர், பொம்மிடி வழியாக வேப்பாடி ஆற்றின் மூலம் தண்ணீர் தொப்பையாறு அணைக்கு வருகிறது.
தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட பகுதிகளில் செக்காரபட்டி, தொப்பூர், கம்மம்பட்டி, வெள்ளார், தெத்திகிரிபட்டி, மல்லிகுந்தம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் சுமார் 5330 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் பகுதிகளை ஒட்டியுள்ள மக்கள் மற்றும் பாசனப் பரப்பை ஒட்டியுள்ள மக்கள் அதிக அளவில் விவசாயத்தையே நம்பி உள்ளனர். பெரும்பாலும் சாமந்தி, மிளகாய், நெல், தக்காளி, போன்றவற்றை அதிகம் பயிர் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த வருடம் அணை நிரம்பிய பின்னர் காலம் மற்றும் பருவம் தவறி திறக்கப்பட்ட தண்ணீர் தருமபுரி, சேலம் மாவட்ட பாசன பகுதியில் சிறிதளவு கூட பயன்படவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கடந்த 5 ஆண்டுகளாக பாசன கால்வாய்கள் தூர்வாரப்படாமல் முட்கள், புதர்கள், மரங்கள் அடர்ந்து காணப்பட்டது.
அணை நிரம்பும் என்று எதிர்பார்க்காத அதிகாரிகள் கால்வாய் பராமரிப்பு பணியை 5 ஆண்டுகளாக செய்யாமல் கோட்டை விட்டனர்.
திடீரென அணை நிரம்பியதும் அணை திறப்பிற்கு இரு தினங்கள் முன்பே அவசர அவசரமாக தூர்வாரும் பணியை செய்ததால் பல்வேறு இடங்களில் கால்வாய்களில் உடைப்பும் பக்கவாட்டு சுவர்களில் சேதமும் ஏற்பட்டது.
மேலும் விவசாயிகள் பயிரிடும் பருவகாலங்களில் அணையை திறக்காமலும் தண்ணீர் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடாமல் இருந்ததால் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை மேற்கொள்ளாமல் இருந்தனர். தொடர்ந்து கால்வாய்களில் வந்த தண்ணீர் எந்த விளை நிலங்களுக்கும் பயனளிக்காமல் தரிசு நிலங்களிலும் சாலை ஓரங்களிலும் ஓடி பயனற்று பாய்ந்தது.
தற்போது அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வரும் மாதங்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது.
அதனால் இந்த ஆண்டாவது முன்கூட்டியே உடைப்பு ஏற்பட்டுள்ள மற்றும் பராமரிப்பு இல்லாமல் முட்புதர்கள் மண்டி, மரங்கள் வளர்ந்து கால்வாய்கள் முழுவதும் அடர்ந்து காணப்படும் பகுதிகளை சீரமைத்து வைத்தால் பாசனத்திற்காக தண்ணீரை திறக்கும் போது கால்வாய்கள் மூலம் தங்கு தடையின்றி கொண்டு சேர்க்கும்.
விவசாய நிலங்கள் முழுமையாக பயன் அடையும் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.