ரேஷன் கடை ஊழியர் சங்க தலைவரை கொல்ல முயற்சி:கூலிப்படையினர் 8 பேர் கைது
- தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா.
- மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவராக இருப்பவர் ஜெயச்சந்திரன் ராஜா. இவர் சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வருகிறார்.
கடந்த 17 தினங்களுக்கு முன்பு சிதம்பரம் மானா சந்து அருகே இவர் தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த 2 மர்ம நபர்கள், அவரை சோடா பாட்டில் கொண்டு தாக்கினர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் கடந்த 5-ந் தேதி காலை 10 மணியளவில் சிதம்பரம் பகுதியில் ஜெயசந்திரன் ராஜா தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரது தலை, கை உள்ளிட்ட பல இடங்களில் கத்தியால் வெட்டினார்கள். இதில் பலத்த காயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவரை தாக்கியவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இது மட்டுமின்றி சிதம்பரம் விருத்தாசலம் புதுக்கோட்டை கும்பகோணம் சென்னை உள்ளிட்ட இடங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பணம் கொடுக்கல் வாங்கலில் ஜெயசந்திரன் ராஜா தாக்கப்பட்டாரா அல்லது வேலை வாங்கி தருவதாக கூறி யாரையாவது ஏமாற்றினாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜெயசந்திரன் ராஜாவை தாக்கியது கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.