உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

Published On 2023-07-20 12:40 IST   |   Update On 2023-07-20 12:40:00 IST
  • அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது.
  • சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் அஜித் (வயது19), அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன் சிலம்பரசன் (20), நாகராஜ் மகன் அஜய் (17) ஆகிய 3 பேரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனம் மீது ஏறி இறங்கியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் இறந்த அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News