பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இரு தரப்பினர் மோதல்- பா.ம.க.வினர் சாலை மறியல்
- இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
- இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ் இடையாளம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் இவருக்கு இன்று பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்கின்ற ஜெயசந்திரன், சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் அதே பகுதியில் உள்ள விடுதலை சிறுத்கதைகள் ட்சி கொடி கம்பத்தின் அருகே பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.
இந்த நிலையில் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை ஆட்டி சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பகுதிக்கு வந்த ராவணன், சுபாஷ், கன்னியப்பன் ஆகியோர் ஏன் கட்சி கொடி கம்பத்தை இதுபோல் செய்து உள்ளீர்கள் என கேட்டு உள்ளனர்.
ஆனால் அதற்கு லட்சுமணன் தரப்பினர் தாங்கள் அந்த கொடியை சேதப்படுத்தவில்லை என கூறியுள்ளனர். இதனையடுத்து இவர்களுக்குள் மோதல் உருவாகும் சூழலை கண்ட அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென ராவணன் தரப்பினர் லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது . இதனால் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதில் எதிர்தரப்பை சேர்ந்த பா.ம.க. கட்சியில் உள்ள லட்சுமணன் தரப்பினருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை அறிந்த மயிலம் போலீசார் இரு தரப்பினையும் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இரு தரப்பையும் விசாரணைக்காக போலீசார் அழைத்துச் செல்ல வந்துள்ளனர். அப்பொழுது லட்சுமணன் உறவினர்கள் மற்றும் பா.ம.கவினர் ஒரு தரப்பினரை மட்டுமே போலீஸ் விசாரிப்பதாக கூறி திடீரென லட்சுமணன் தரப்பினர் சென்ற காரை வழிமறித்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
திடீரென பா.ம.க.வினர் மற்றும் பொதுமக்கள் திண்டிவனம் ஜக்காம் பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் சமாதானம் பேசி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இரு தரப்பினரையும் காலை போலீஸ் நிலையம் அழைத்து விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்துசாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பா.ம.க.வினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இரு தரப்பினர் புகாரின் பேரில் மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.