கோவை முன்னாள் எம்.பி. மோகன் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர்.
- எப்போது கோவைக்கு சென்றாலும், இரா.மோகனை சந்திக்கத் தவறியதில்லை.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-
கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா.மோகன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவப் பருவத்திலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், தன்னுடைய 13 வயதிலேயே நகர்மன்றத் தேர்தலில் கையில் இருவண்ணக் கொடியேந்தி, கழக வேட்பாளர்களுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்தவர்.
இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் பேரன்பிற்குப் பாத்திரமான அவர், 1980-ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும்,1989-ம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, தன்னுடைய தொண்டால் பொதுமக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.
கொள்கை மறவராக வாழ்ந்த இரா.மோகனுக்கு, கடந்த 15.9.2022 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில், "அண்ணா விருது" வழங்கி, அவரது பொதுவாழ்வைப் போற்றினேன்.
நான் எப்போது கோவைக்குச் சென்றாலும், இரா.மோகனைச் சந்திக்கத் தவறியதில்லை. இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன். இரா. மோகன் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள், கோவை மக்கள் என அனவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.