கொடைக்கானலில் தொடரும் உறைபனி: பூங்காவில் மலர் நாற்றுகளை பாதுகாக்க போர்வை
- தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன.
- சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த மாதம் முதல் கடுமையான பனி நிலவி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் 7 டிகிரி செல்சியசுக்கு கீழ் வெப்பநிலை சென்றதால் பல்வேறு இடங்களில் உறைபனி காணப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்தனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடைவிழா, மலர் கண்காட்சி நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டு 62-வது மலர் கண்காட்சிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதற்கட்ட மலர் செடிகள் நடவு நடைபெற்றது.
தற்போது 40 ஆயிரம் மலர் நாற்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் சால்வியா, பிங்க் ஆஸ்டர், ஒயிட் ஆஸ்டர், டெல்பினியம், லில்லியம் உள்ளிட்ட 10 வகையான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
கடந்த சில நாட்களாக மனிதர்களை மட்டுமின்றி மலர் செடிகளையும் பனி கடுமையாக பாதித்து வருகிறது. மதியம் 3 மணிக்கு மேல் தொடங்கும் பனியின் தாக்கம் மறுநாள் காலை 10 மணிவரை நீடிக்கிறது.
இதனால் மலர் நாற்றுகள் கருகுவதை தவிர்க்க பூங்கா நிர்வாகம் சார்பில் செடிகளுக்கு நிழல்வலை அமைப்பு கொண்ட பனிப்போர்வை போர்த்தப்பட்டுள்ளது. பனிக்காலம் முடியும் வரை இந்த போர்வை இருக்கும் என்று பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான பனியின் தாக்கம் அதிகரித்து வருவதால் கொடைக்கானலில் வார நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் குறைவாகவே காணப்படுகிறது.