கிரிப்டோகரன்சி மோசடி: கள்ளநோட்டு கும்பல் சிக்கியது எப்படி?- பரபரப்பு தகவல்
- கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர்.
- கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் ஆன்டனி செல்வன் (வயது 40). இவர் பெருமாள்புரம் ராஜ ராஜேஸ்வரி நகர் பகுதியில் ஆன்லைன் கிரிப்டோ கரன்சி டிரேடிங் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 24-ந்தேதி கிரிப்டோ கரன்சி பண பரிவர்த்தனையில் ஏமாற்றப்பட்டதாக பெருமாள்புரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில் தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த முகம்மது ரியாஸ் (36) என்பவர் மூலம் அறிமுகமான சங்கரன் கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டையை சேர்ந்த அய்யாதுரை (37), மதுரையை சேர்ந்த இசக்கிமுத்து (28) ஆகியோர் தங்களுக்கு அமெரிக்க டாலருடன் இணைக்கப்பட்ட கிரிப்டோகரன்சி தேவைப்படுவதாக கூறி ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றியதாக கூறியிருந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணையில் இறங்கினார். அதில் ரூ.75 லட்சம் மதிப்பில் சுமார் 82 ஆயிரத்து 691 அமெரிக்க டாலர் கிரிப்டோகரன்சியை முகமது ரியாஸின் மின்னணு பணப்பைக்கு (எலக்ட்ரானிக் வேலட்) மாற்றம் செய்து அதற்கான பணம் ரூ.75 லட்சத்தினை ஆண்டனியிடம் கொடுத்துள்ளனர். அவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவுபடி தனிப்படை திண்டுக்கல், பழனி மற்றும் பாலக்காடு ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதனிடையே வழக்கில் சம்பந்தப்பட்ட முகமது ரியாஸ், அய்யாதுரை மற்றும் இசக்கி முத்து ஆகியோர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர்.
புகார் குறித்து விசாரணையை தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் கைது செய்ததுடன், முகமது ரியாஸ் மின்னணு பணப்பையில் இருந்த ரூ.75 லட்சம் மதிப்பிலான 82691 அமெரிக்க டாலருக்கு இணையான கிரிப்டோகரன்சியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களை கமிஷனர் பாராட்டினார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடியில் அடிக்கடி இத்தகைய மீட்புகள் நடக்கிறது. நெல்லையில் இதுதான் முதல் முறை. மோசடி செய்த முகமது ரியாஸ் தனது வாலட்டில் அதை வைத்திருந்ததால் எளிதாக பறிமுதல் செய்ய முடிந்தது.
கிரிப்டோகரன்சி குற்ற வழக்குகளில் முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சி மீட்கப்பட்டது இதுவே முதல் முறை.
இந்த வகையான கிரிப்டோ மோசடிகளில் இருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிக லாப வாக்குறுதிகள் அளித்து முதலீடு செய்யுமாறு அழைப்பவர்களை நம்ப வேண்டாம். நம்பகமான நிறுவனம் மற்றும் சட்டப் பூர்வமான வழிகளில் மட்டுமே முதலீடு செய்வது பாதுகாப்பானது என்றனர்.