உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டில் காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள் 4 பேர் படுகாயம்

Published On 2025-02-16 11:56 IST   |   Update On 2025-02-16 11:56:00 IST
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.
  • காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. இதையொட்டி திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன.

கால்நடைகளை உதவி இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமையில் கால்நடை மருத்துவர் ஸ்ரீதேவி தலைமையிலான மருத்துவ குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து ஜல்லிக்கட்டில் 725 காளைகள் பங்கேற்க அனுமதி வழங்கினர்.

இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு டாக்டர்கள் அசோக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்கள் 350 பேரை பரிசோதனை செய்து காளைகள் பிடிக்க அனுமதித்தனர். இதையடுத்து காலை 7.45 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கியது. இதை கோட்டாட்சியர் சக்திவேல் தொடங்கி வைத்தார். இதில் கிழக்கு தாசில்தார் மீனாதேவி, மண்டல துணை வட்டாட்சியர் பிரேம், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், வி.ஏ.ஓ. சுல்தான் பேகம் ஆகியோர் உடனிருந்தனர்.

முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன.

சில காளைகள் யாரிடமும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து சென்று தனது உரிமையாளருக்கு பரிசுகளை பெற்றுக் கொடுத்தது. காளைகளை மாடுபிடி வீரர்கள் லாவகமாக பிடித்தனர். சில காளைகள் மைதானத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடின. இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கம்பீரமான காளைகளை பிடிக்க வந்த வீரர்களுக்கு காளைகள் போக்கு காட்டி அவர்களை முட்டித் தள்ளின.

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்று பிடிபடாத மாடுகள் மற்றும் காளைகளை பிடித்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், அண்டா, பானை, குக்கர், ஆட்டுக்குட்டி, கட்டில், பீரோ உள்ளிட்ட பல பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்த ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் லிங்கவாடியைச் சேர்ந்த பொன்னன் (வயது 22), தவசி மேடையைச் சேர்ந்த பாதுகாப்பு குழு விக்டர் (28), மதுரையைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர் ஆனந்த்(29), நொச்சி ஓடைபட்டியை சேர்ந்த பார்வையாளர் தனுஷ் ராஜா (22) ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வம், மகேஷ், புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. சிபி சாய் சவுந்தர்யன், நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் உள்பட 320 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News