2 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம்- பல்வேறு புகாரால் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.
- அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
தருமபுரி:
தருமபுரி நகரில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி நகரில் உள்ள அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் தெரேசால், பணி ஓய்வு பெற்றதை அடுத்து கடந்த ஓராண்டுக்கு முன்பு கலைச்செல்வி, என்பவர் பாலக்கோடு மகளிர் அரசு பள்ளியில் இருந்து அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த இப்பள்ளி தகைச்சாள் பள்ளியாக தரம் உயர்த்தப் பட்டது. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமித்ததில் முறைகேடு நடந்ததாக தலைமை ஆசிரியை கலைச்செல்வி மீது புகார் எழுந்துள்ளது.
மேலும் அவர் மீது 50-க்கும் மேற்பட்ட பல்வேறு முறைகேடு புகார்களை தருமபுரிக்கு வந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்திடம் பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர். இதை அடுத்து கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர் மீது கூறப்பட்ட புகார் உண்மைதானா என விசாரணை நடத்தினர். இதில் முறைகேடு நடந்தது தெரியவந்தது.
இதை அடுத்து நேற்று முன்தினம் தலைமை ஆசிரியை கலைச்செல்வி காமலாபுரம் அரசு மேல்நிலை பள்ளிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்த தலைமை ஆசிரியர் சுதா, அவ்வையார் அரசு பள்ளிக்கு தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பொறுபேற்றார்.
இதே போல் தருமபுரி நகர் அதியமான் ஆண்கள் பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டாக தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் தங்கவேலு. இவர் பொறுப்பேற்ற பின்னர் பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவு, போட்டி தேர்வுகளில் மாணவர்கள் ஒருவர் கூட வெற்றி பெறாதது, உயர்கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்படாதது என பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரால் கூறப்பட்டது.
நேற்று முன்தினம் அதியமான் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேலு வத்தல்மலை அரசு மேல் நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். வத்தல்மலையில் பணியாற்றிய தலைமை ஆசிரியர் காமராஜ் தருமபுரி டவுன் அதியமான் அரசு மேல்நிலை பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.
ஒரே நாளில் இரு மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டது கல்வித் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.