ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரே நாளில் ரூ.9 லட்சம் பறிமுதல்
- ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உரிய ஆவணங்களை சமர்பித்ததால் இதுவரை 12 லட்சத்து 93 ஆயிரத்து 60 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை கருங்கல்பாளையம், காவிரி ரோடு அருகே நிலை கண்காணிப்பு குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். இதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், கார் உரிமையாளர் மதன் என்பதும் நாமக்கல் மாவட்டம் களத்துவலவு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
இதேபோன்று, நிலை கண்காணிப்பு குழுவினர் பி.பி.அக்ரஹாரத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரில் சோதனை மேற்கொண்ட போது, உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்தவர் ராமன் என்பதும், அவர் அந்தியூர் அடுத்த தவுட்டுப்பாளையம் என்பதும் தெரியவந்தது.
பழையபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில், உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட ரூ.2.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காரை ஒட்டி வந்தவர் கவிதா என்பதும் திருப்பூர் மாவட்டம் கணியம்பூண்டி என்பதும் தெரிய வந்தது.
இதே போல் நேற்று இரவு 11.20 மணி அளவில் வில்லரசம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.2.90 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது என்பது தெரிய வந்தது. அவரிடம் பணத்திற்குரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
நேற்று ஒரே நாளில் ரூ.9 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை ரூ.33 லட்சத்து 85 ஆயிரத்து 60 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்பித்ததால் இதுவரை 12 லட்சத்து 93 ஆயிரத்து 60 ரூபாய் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.