வேகமாக சரிந்து வரும் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம்
- தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 122.50 அடியாக உள்ளது.
- தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுைர மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
152 அடி உயரம் கொண்ட அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. தற்போது மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து இன்று காலை நிலவரப்படி 122.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 53 கனஅடியாக உள்ளது. நேற்று 667 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று நீர்திறப்பு 611 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தண்ணீர் திறப்பை மேலும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த ஜனவரி மாதம் முதல் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிந்தது. இருந்தபோதும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. தற்போதும் 50 கனஅடிநீர் திறப்பு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. அணையில் நீர்வரத்து மிகவும் குறைந்த நிலையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டுமே தண்ணீர் திறக்கப்பட வேண்டும்.
வருகிற ஜூன்மாதத்தில் முதல்போக நெல்சாகுபடி தொடங்க உள்ளது. அப்போது தண்ணீர் தேவை. எனவே நீர்திறப்பை குறைக்க வேண்டும் என்றனர்.
வைகை அணையின் நீர்மட்டம் 55.15 அடியாக உள்ளது. 345 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 45.20 அடியாக உள்ளது. 30 கனஅடிநீர் வருகிறது. 75 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 67.57 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 16 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.