உள்ளூர் செய்திகள்

கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-12-13 05:33 GMT   |   Update On 2024-12-13 05:33 GMT
  • பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
  • விநாடிக்கு 16,500 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

திருவள்ளூர்:

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம், பூண்டி நீர்த்தேக்கம் 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும்.

இதன் முழுகொள்ளளவு 3231 மில்லியன் கனஅடியாகும். நேற்றைய நிலவரம் படி நீர்இருப்பு 34.97 அடியாகவும் கொள்ளவு 3159 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

பூண்டி ஏரியின் நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என்பதால் அணையின் வெள்ள நீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பிற்பகல் முதற்கட்டமாக 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால் மாலை 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இன்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து 12760 மில்லியன் கன அடி வந்து கொண்டிருப்பதால் 12000 கன அடி உபரி வெளியேற்றப்படுகின்றது.

இந்த நிலையில் பூண்டி ஏரியில் நீர்வரத்து 16,500 கன அடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரிப்பதால் நீர் திறப்பும் அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே உபரி நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன் தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

Tags:    

Similar News