ஓசூர் மலைக்கோவில் மரகதாம்பிகை அம்மனுக்கு புதிய தேர் அமைக்கும் பணி:
- 30 டன் அளவிலான மருது, தேக்கு மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டன.
- முன்னதாக, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வாமி கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் விமர்சையாக நடைபெற்று வருகிறது. விழாவின் போது சந்திரசூடேஸ்வர சாமியை அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரிலும், மரகதாம்பிகை அம்மனை சிறிய தேரிலும் வைத்து பக்தர்கள் தேரை இழுத்துச் செல்வார்கள்.
இந்த நிலையில், 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அம்மன் தேர் பழுதடைந்ததால், புதிதாக சிறிய தேர் உருவாக்க முடிவு செய்யப்பட்டது. தேர் அமைக்கும் பணிக்காக, 30 டன் அளவிலான மருது, தேக்கு மற்றும் இலுப்பை மரங்கள் வாங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, புதிய தேர் அமைக்கும் பணி, ஓசூர் தேர்பேட்டையில் , நேற்று ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ.வும், சந்திரசூடேஸ்வரர் தேர் கமிட்டி தலைவருமான மனோகரன் தலைமையில் தொடங்கியது. முன்னதாக, மலைக்கோவில் தலைமை அர்ச்சகர் வாசீஸ்வரன் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
பின்னர், ஸ்தபதி மற்றும் அவரது குழுவினருக்கு மரியாதை செய்யப்பட்டது. மேலும் இதில், கோவில் செயல் அலுவலர் சாமிதுரை, மாநகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணவேணி ராஜி, மேற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர் நாகராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கமிட்டி உறுப்பினர்கள், ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய தேர் அமைக்கும் பணியில், திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி இளவரசன் தலைமையில் 12 பேர் ஈடுபட்டுள்ளனர். இன்னும் 3 மாதத்தில் புதிய தேர் அமைக்கும் பணி நிறைவடையும் என தெரிவித்தனர்.