உள்ளூர் செய்திகள்

நெற்பயிரில் இலை சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி?

Published On 2023-11-21 15:50 IST   |   Update On 2023-11-21 15:50:00 IST
  • 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை 45 ஆவது நாளில் தெளிக்கலாம்.
  • தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

தஞ்சாவூர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெற் பயிரில் இலை சுருட்டுப் புழுவைக் கட்டுப்படுத்துமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை இணை இயக்குநா் (பொ) ஈஸ்வா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியிருப்பதாவது:

தஞ்சை மாவட்டத்தில் பருவ மழை விட்டு, விட்டு பெய்து வருவதால், சம்பா, தாளடி நெற் பயிரில் ஆங்காங்கே இலை சுருட்டுப் புழுவின் தாக்குதல் தென்படுகிறது.

இலை சுருட்டுப் புழுக்கள் இலையை மடக்கி, அடிப்பகுதியில் பச்சையத்தை சுரண்டி உண்பதால், இலைகள் வெண்மையாக தென்படும்.

மேலும், இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் மடக்கப்பட்ட இலைகளுக்கு இடையில் காணப்படும்.

தீவிர தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.

இலை சுருட்டுப்புழுத் தாக்குதல் உள்ள வயல்களில் விளக்கு பொறிகளை ஒரு ஏக்கருக்கு 2 இடங்களில் வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவா்ந்திழுத்து அழிக்கலாம்.

பறவை இருக்கைகள் ஒரு ஹெக்டேருக்கு 40 - 50 எண்கள் அமைப்பதன் மூலம் புழுப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம்.

தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும்.

5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை 45 ஆவது நாளில் தெளிக்கலாம்.

மேலும், இலை சுருட்டுப்புழுவின் தாக்குதல் பொருளாதார சேத நிலைக்கு மேல், அதாவது தூா் கட்டும் தருணத்தில் 10 சதவீதம் இலைகளில் தாக்குதல் அல்லது பூக்கும் தருணத்தில் 5 சதவீதம் இலைகளில் தாக்குதல் இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. அசாடிராக்டின் அல்லது 60 மி.லி. குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 சதவீதம் அல்லது 400 கிராம் காா்டாா்ப் ஹைட்ரோகுளோரைடு 200 லிட்டா் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News