உள்ளூர் செய்திகள்

5 குழந்தைகளை தவிக்க விட்டு கடன் தொல்லையால் கணவன்-மனைவி தற்கொலை

Published On 2022-12-02 09:44 GMT   |   Update On 2022-12-02 09:44 GMT
  • ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.
  • இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் ஹைதர் அலி (வயது45). இவருடைய மனைவி ஷானுமா (40). இவர்களுக்கு 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

கணவன்- மனைவி இருவரும் பை செய்யும் தொழில் செய்து வந்தனர். நேற்று காலையில் ஹைதர் அலியும், ஷானுமாவும் பிள்ளைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கணவன்- மனைவி இருவரும் வீட்டிலேயே இருந்தனர்.

மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த பிள்ளைகள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு ஒரு அறையில் ஹைதர் அலி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பிள்ளைகள் கதறி அழுதனர். உடனே ஷானுமாவை தேடினார்கள். மற்றொரு அறையில் அவரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதைக்கண்டு்பிள்ளை கள் கதறி அழுத சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் ஓடி வந்தனர். கணவன்- மனைவி இருவரும் வெவ்வேறு அறைகளில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து வேப்பனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அக்கம் பக்கத்தில் உள்ளவரிடமும், பிள்ளைகளிடமும் விசாரணை நடத்தினர். பின்னர் ஹைதர் அலி, ஷானுமா இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதர் அலி, ஷானுமாவும் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. குடும்ப தகராறு காரணமா? அல்லது கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டனரா? வேறு ஏதேனும் காரணமா?என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தாய்-தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 5 குழந்தைகள் அழுது தவித்த சம்பவம் வேப்பனப்பள்ளி பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News