உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட போவது தி.மு.க.வா? காங்கிரசா?

Published On 2024-12-30 11:23 IST   |   Update On 2024-12-30 11:23:00 IST
  • தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் யாருக்கு சீட்டு கிடைக்கும்.
  • இரு கட்சியினர் மட்டுமல்ல தொகுதி மக்களும் காத்திருக்கின்றனர்.

பெருந்துறை:

2008ல் தொகுதி வரையறை செய்யப்பட்ட போது ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டு 2011ல் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணியில் வேட்பாளராக களம் இறங்கிய தே.மு.தி.க.வின் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

2016-ல் தே.மு.தி.க.வில் இருந்து விலகிய வி.சி.சந்திரகுமார் தி.மு.க. வேட்பாளராகவும், கே.எஸ்.தென்னரசு அ.தி.மு.க. வேட்பாளராகவும் போட்டி யிட்டதில் தென்னரசு வெற்றி பெற்றார்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார். 2023-ல் உடல் நலக்குறைவால் திருமகன் ஈவெரா திடீரென காலமானார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இளங்கோவனும் காலமான தால் தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே தொகுதிக்கு 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெற போகிறது.

இதுவரை நடைபெற்ற 4 தேர்தலில் தி.மு.க. 2 முறையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் 2 முறையும் போட்டியிட்டதில் 1 முறை தி.மு.க.வும், 2 முறை காங்கிரசும், ஒரு முறை அ.தி.மு.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

2023 இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

இந்நிலையில் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த 14ம் தேதி காலமானார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலுடன், ஈரோடு கிழக்கு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு வாய்ப்பு அளிக்காமல் தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

அண்மையில் ஈரோடு வந்து சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணி சார்பில் எந்த கட்சி போட்டியிடுவது என்பதை கலந்து பேசி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிச் சென்றார்.

இந்த தொகுதியில் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்பது உறுதியாகாத நிலையில் ஈரோடு கிழக்கில் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெறுவதற்காக இப்போதே தி.மு.க.வின் முக்கிய அரசியல் கட்சியினர் மேலிடத்தை அணுகி வருகின்றனர்.

இருப்பினும் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் போட்டியிடுவதாக இருந்தால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிடவே அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரசார் கூறுகின்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:-கடந்த 2023 இடைத்தேர்தலில் தனது உடல்நிலையை காரணம் காட்டி, தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு போட்டியிட வாய்ப்பளிக்குமாறு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கேட்டுக் கொண்டார்.

ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கேட்டு தான் முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன் என்று கூறிச் சென்றார்.

ஆனால் இளங்கோவன் மீது கொண்ட அன்பினால், இந்த முறை நீங்களே வேட்பாளராக நில்லுங்க! உங்களை ஜெயிக்க வைப்பது எங்கள் கடமை" எனக் கூறி இளங்கோவனை போட்டியிட வைத்தார்.

எதிர்பார்த்தபடியே இளங்கோவன் வெற்றி பெற்றார். எதிர்பாராத வகையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால் இந்த முறை தந்தை பெரியாரின் குடும்ப வழி தோன்றலான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத்துக்கு சீட்டு கொடுக்க வாய்ப்புள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் சஞ்சய் சம்பத் மற்றும் அவரது தாயார் வரலட்சுமி இளங்கோவன் உள்ளிட்ட குடும்பத்தினர் இளங்கோவனின் மறைவினால் ஏற்பட்ட துக்கத்தில் இருந்து முழுமையாக இன்னும் மீளவில்லை.

தமிழக அரசியலில் பெரியாரின் வழித் தோன்றலின் அடுத்த வாரிசாக கொள்ளு பேரன் சஞ்சய் சம்பத் உள்ளார். அவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என இளங்கோவன் குடும்பத்துடன் நெருக்கமாக உள்ள காங்கிரசார், தி.மு.க. தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.

ஆனால், தி.மு.க.வில் உள்ள 2-ம் கட்ட தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் நிலையில் உள்ளவர்கள் காங்கிரசுக்கு 2 முறை வாய்ப்பளிக்கப்பட்டு விட்டதால் இம்முறை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளரையே களம் இறக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அதற்கு பதிலாக ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு எம்.பி. சீட்டு தருவதாகவும் பேசி வருகிறார்கள்.

ஆனால், தமிழக அரசியலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தார். இந்த முறை வாய்ப்பளிக்காவிட்டால் அரசியலில் இளங்கோவன் குடும்பத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது போல் ஆகும்.

சஞ்சய் சம்பத்தை தவிர ஈரோடு கிழக்கில் வலுவான காங்கிரஸ் வேட்பாளர் இல்லை என தி.மு.க. தரப்பில் அக்கட்சியின் மேலிடத்தில் கூற வாய்ப்புள்ளது. எனவே சஞ்சய் சம்பத்துக்கு காங்கிரஸ் சார்பில் போட்டிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு காங்கிரஸார் கூறுகின்றனர்.

ஒருவேளை சஞ்சய் சம்பத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், கர்நாடகா மாநில காங்கிரஸ் பொறுப்பாளருமான கோபி, முன்னாள் மாநகர் மாவட்டத் தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான இ.பி.ரவி, முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் உள்ளிட்டோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட திட்டமிட்டு அதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தார் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டால் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் (தி.மு.க.) தான் போட்டியிட வேண்டும் என தி.மு.க.வினர் கருதுகின்றனர். அதற்கு தகுந்தபடி ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமார், தற்போதைய ஈரோடு தெற்கு மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் விவேக், மாநகரச் செயலாளர் சுப்பிரமணி, எஸ்.எல்.டி.பி.சச்சிதானந்தம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம் உள்பட தி.மு.க.வினர் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளனர்.

இத்தொகுதியை பொருத்தவரை முதலியார் சமூக வாக்குகள் அதிகம் உள்ளதால் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் அந்த சமூகத்தை சேர்ந்த வி.சி.சந்திரகுமார், செந்தில்குமார், திருவாசகம், டாக்டர் விவேக் ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

தே.மு.தி.க.வில் எம்.எல்.ஏ.வாக இருந்த வி.சி.சந்திரகுமார் அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்ததும் 2016ல் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தபின் அவருக்கு மறு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அண்மையில் நடைபெற்ற சந்திரகுமார் மகள் திருமணத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர். கட்சித் தலைமையுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் தி.மு.க. போட்டியிடும் பட்சத்தில் தனக்கு சீட்டு கிடைக்கும் என்று நம்புகிறார்.

அதேசமயம் நீண்ட காலமாக கட்சியில் உழைத்து வரும் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் இந்த முறை தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்.

கடந்த 2023-ம் ஆண்டு செந்தில்குமாரின் அண்ணன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக ஈரோடு வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தேர்தல் நிதியாக ரூ.5 லட்சத்து 55 ஆயிரத்து 555ஐ வழங்கி ஸ்டாலினை ஆச்சரியப்பட வைத்தார்.

அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் குமாருக்கு உரிய நேரத்தில் உரிய பதவி தேடிவரும். அதுவரை காத்திருக்குமாறு கூறிச் சென்றார். எனவே இந்த முறை தி.மு.க. சார்பில் தனக்கு தான் எம்.எல்.ஏ சீட்டு கிடைக்கும் என்று செந்தில்குமார் எதிர்பார்க்கிறார்.

இதேபோல செந்தில்குமாரின் அண்ணன் மகனான மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.

டாக்டர் விவேக், மருத்துவ அணியின் மாவட்ட அமைப்பாளராக கட்சியில் தொடர்ந்து பணியாற்றி வருவதால் தனக்கு தலைமை வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கிறார்.

மொத்தத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் இரு கட்சியினர் மட்டுமல்ல தொகுதி மக்களும் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News