உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலை கிரிவலம் வந்தவர் கள்ளச்சாராயம் குடித்து பலி

Published On 2024-06-22 09:40 IST   |   Update On 2024-06-22 09:40:00 IST
  • ராஜா ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம்.
  • குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18-ந் தேதி விற்பனை செய்யப்பட்ட எத்னால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்நது கொண்டே வருகிறது.

இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வந்த பக்தர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து பலியானது தற்போது தெரியவந்தது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

கோவையை சேர்ந்தவர் ராஜா (வயது 35). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவியும் 3 குழந்தைகள் உள்ளனர். சிவ பக்தரான ராஜா ஒவ்வொரு மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்வது வழக்கம். அதுபோல் கடந்த 18-ந் தேதி திருவண்ணாமலைக்கு செல்ல கோவையில் இருந்து புறப்பட்டு கள்ளக்குறிச்சி வந்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் வந்து இறங்கிய ராஜா அங்குள்ள டீ கடைக்காரரிடம் சாராயம் எங்கு விற்கப்படுகிறது என கேட்டுள்ளார். அதற்கு டீ கடைக்காரர் கருணாபுரத்தில் சாராயம் விற்பதாக தெரிவித்துள்ளார். அதன்படி கருணாபுரத்தில் சாராயம் வாங்கி குடித்த ராஜா சிறிது நேரத்தில் வயிற்று வலியால் துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா இறந்தார்.

அவர் அணிந்திருந்த சட்டைபையில் இருந்த ஆதார் கார்டு மூலம் அவரது முகவரியை தொடர்பு கொண்டு போலீசார் ராஜாவின் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதையடுத்து நேற்று அவரது குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ராஜாவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News