கடையநல்லூர் அருகே கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது
- பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
- மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி மரியா ஆரோக்கிய செல்வி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
கடந்த 5-ந்தேதி முத்துக்குமார் மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் திடீரென மயக்கம் அடைந்து விட்டார் என்று கூறி 108 ஆம்புலன்சில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், முத்துக்குமார் வரும் வழியிலே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆனால் அவர் இறப்பிற்கான காரணம் என்ன என்று அறிவதற்காக முத்துக்குமார் உடலை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். பிரேத பரிசோதனை முடிவில் முத்துக்குமார் கழுத்து எலும்பு நெரிக்கப்பட்ட தடம் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் பிரேத பரிசோதனை முடிவில் அவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியானது. இதனிடையே நொச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலரை நேரில் சந்தித்த மரியா ஆரோக்கிய செல்வி தனது கணவர் மஞ்சள் காமாலையால் இறக்கவில்லை என்றும், தான் கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் தெரியவரவே, மரியா ஆரோக்கிய செல்வியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எனது கணவர் வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வந்து எனக்கும், எனது குழந்தைகளுக்கும் தொந்தரவு கொடுத்ததோடு, அடித்து துன்புறுத்தி வந்தார்.
இதனால் அவரது கொடுமையை தாங்க முடியாமல் கடந்த 5-ந்தேதி இரவில் எனது கணவர் தூங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்தேன். அதில் அவர் மயங்கிவிட்டார். அதன் பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் மஞ்சள் காமாலையில் எனது கணவர் மயங்கி விட்டார் எனக் கூறி நம்ப வைத்து அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தேன் என வாக்குமூலம் அளித்தார்.
அதனை தொடர்ந்து மரியா ஆரோக்கிய செல்வியை சேர்ந்தமரம் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் கைது செய்து சிறையில் அடைத்தார்.