தமிழ்நாடு

அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் ரூ. 2152 கோடியை ஒதுக்கீடு செய்யுங்கள்: மத்திய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி

Published On 2025-02-15 21:13 IST   |   Update On 2025-02-15 21:13:00 IST
  • ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என 32 ஆயிரம் பேருக்கு மாதத்திற்கு 76 கோடி சம்பளம் வழங்க வேண்டியுள்ளது.
  • இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிராதான் தெரிவித்திருந்தார். இதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அன்பில் மகேஷ் கூறியதாவது:-

தமிழ் நாட்டு மக்களை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் படித்து படித்து, ஆட்சி மாற்றம் செய்யப்பட்டதற்கு பின்பும் சரி, முன்பும் சரி தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் இப்படி சொல்லும்போது பாஜக-வினர் நாங்கள் பொய் சொல்கிறார்கள், வெட்கமில்லையா என்று ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் எங்களை பார்த்து வாய் கூசாமல் சொல்கிறார்கள்.

ஆனால் மந்திய அமைச்சர் திட்டவட்டமாக என்ன சொல்லியிருக்கிறார் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நீங்கள் கல்வியில் அரசியல் செய்யாதீர்கள் என நாங்கள் அடிக்கடி சொல்கிறோம். 40 லட்சம் மாணவச் செல்வங்களின் முழு எதிர்காலம் அதில் இடங்கியிருக்கிறது.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என பணியாற்றும் ஏறத்தாழ 32 ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்க வேண்டியிருக்கிறது. ஒரு மாதத்திற்கு 76 கோடி ரூபாய் மதிப்பிலும், வருடத்திற்கு 921 கோடி ரூபாய் என்ற வகையில் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டியிருக்கிறது.

25 சதவீதம் தனியார் பள்ளி ஒதுக்கீட்டிற்கான கட்டணம் 400 கோடி ரூபாயை தாண்டும். இதையெல்லாம் சேர்த்துதான் மாநில அரசு, மத்திய அரசு 60:40 என்ற அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது.

நாங்கள் இதை சொல்லும்போது மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால என்ன? என்ற பிடிவாதத்துடன் இருக்கிறார்கள். அது தேவையில்லை என்ற காரணத்தினால்தான் அண்ணா காலத்தில் இருந்து இருமொழி கொள்கையை பின்பற்றி கொண்டிருக்கிறோம். இருமொழிக்கொள்கையை வைத்து தமிழக மாணவ, மாணவிகள் உலகம் முழுவதும் சாதித்து வருகின்றனர்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா? என்பது இன்னொரு மொழிப்போரை தூண்டுவது போன்றுதான் அமைந்திருக்கிறது. அரசியல் செய்யாமல், சாக்குபோக்கு சொல்லாமல் 2152 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை இப்போதும் வைக்கின்றேன். இருமொழி கொள்கையால் எந்த வகையில் குறைந்து போய்விட்டோம். மாணவர்களை ப்ரூவன் பிராடெக்ட்-ஆக உருவாக்கி வருகிறோம். மும்மொழி கொள்கை ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற அழுத்தத்தை எப்படி தரலாம்.

இவ்வாறு அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

Tags:    

Similar News