தமிழ்நாடு

அரசு பள்ளியில் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- உதவி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

Published On 2025-02-19 08:47 IST   |   Update On 2025-02-19 08:50:00 IST
  • குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
  • பெருமாளை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

அரிமளம்:

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் 400-க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பெருமாள் (வயது 58). இவர் அப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பையும் வகித்து வருகிறார். இந்த நிலையில் அவர், அந்த பள்ளியை சேர்ந்த மாணவிகள் 7 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழும அதிகாரி வசந்தகுமார், சமூக நலத்துறை அதிகாரி கோகுலபிரியா, பொன்னமராவதி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) குமார், கே.புதுப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, திருமயம் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே இந்த சம்பவம் பற்றிய தகவல் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக அரிமளம் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் அதிகாரிகள் தனித்தனியாக விசாரித்தனர். விசாரணையில் 7 மாணவிகளும், உதவி தலைமை ஆசிரியர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மாணவிகளின் வாக்குமூலத்தை வீடியோவாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதற்கிடையே குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்தினர் திருமயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் உதவி தலைமை ஆசிரியர் பெருமாள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை நேற்று கைது செய்தனர்.

பின்னர் அவரை புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் பெருமாளை சஸ்பெண்ட் செய்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

Tags:    

Similar News