தமிழ்நாடு

நாகை-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து- வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது

Published On 2025-02-19 08:27 IST   |   Update On 2025-02-19 08:27:00 IST
  • 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம்.
  • கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்.

நாகப்பட்டினம்:

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு(2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம்(ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சனைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பிரச்சனைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு காணப்பட்டு கப்பல் சேவை தொடங்கப்படும் என்று கப்பல் நிறுவனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நாகை-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து வருகிற 22-ந் தேதி(சனிக்கிழமை) மீண்டும் தொடங்கப்படும் என கப்பலை இயக்கும் சுபம் நிறுவனத்தின் தலைவர் சவுந்தரராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாகை-இலங்கை இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் கப்பல் போக்குவரத்து நடைபெறும். பயணிகள் www.sailsubham.com என்ற இணையதளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். 10 கிலோ எடையுள்ள உடைமைகளை பயணிகள் இலவசமாக எடுத்துச்செல்லலாம். கூடுதலாக உடைமைகளை எடுத்துச்செல்ல கட்டணம் செலுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News