தமிழ்நாடு

திமுக ஆட்சியில் முற்றாகச் சீரழிந்துள்ள சட்டம்-ஒழுங்கு; சமூக விரோதிகளின் கூடாரமான தமிழ்நாடு!- சீமான்

Published On 2025-02-15 14:29 IST   |   Update On 2025-02-15 14:29:00 IST
  • தமிழ்நாட்டில் பெருகி ஓடும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.
  • ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம்தான் காரணம் என்ற தமிழ்நாடு காவல்துறையின் விளக்கம் வியப்பளிக்கிறது.

சென்னை:

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மயிலாடுதுறை மாவட்டம், முட்டம் கிராமத்தில் கள்ளத்தனமாகச் சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி என்ற இளைஞர்களை ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன் என்ற 3 கள்ளச்சாராய வியாபாரிகள் கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது. பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.

சாராய விற்பனை குறித்துப் பல முறை புகாரளித்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கத்தவறிய காவல்துறையின் அலட்சியப்போக்கே தற்போது இரண்டு இளைஞர்களின் இன்னுயிர் பறிபோக முதன்மைக் காரணமாகும். தமிழ்நாட்டில் பெருகி ஓடும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்தாத, திமுக அரசின் மெத்தனப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் இழைக்கும் அநீதிக்கு எதிராகவும், நாளும் நிகழ்ந்தேறும் சமூக அவலங்களுக்கு எதிராகவும் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாகிவிட்டது. அண்மையில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய திருமயம் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக்கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட சுவடுகள் மறைவதற்குள், தற்போது மயிலாடுதுறையில் கள்ளத்தனமாக சாராயம் விற்றதைத் தட்டி கேட்ட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்தேறியுள்ளது. திமுக ஆட்சியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மணற்கொள்ளையைத் தடுக்க முயன்ற கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அரசு அலுவலகத்திலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடுமையும் நடந்தது என்பதையும் மறந்துவிட முடியாது.

கடந்த சில நாட்களுக்கு முன் சின்னப்போரூர் அரசு மருத்துவமனையில், மருத்துவர் இல்லை என்று அன்புத்தம்பி கஞ்சா கருப்பு கூறிய புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்காததோடு, தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரே 'இதற்கு மேல் பேசினால் கஞ்சா கருப்புக்குத்தான் பிரச்சனை' என்று பொதுவெளியில் மிரட்டி அச்சுறுத்தும் திமுக அரசின் எதேச்சாதிகாரப்போக்குதான், அதிகாரத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்களைப் படுகொலை செய்யும் துணிவினை சமூக விரோதிகளுக்குத் தந்துள்ளது.

நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் கள்ளச்சாராய விற்பனையிலும், கட்டுக்கடங்காத கஞ்சா புழக்கத்திலும், டாஸ்மாக் மது விற்பனையிலும்தான் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு மாறிநிற்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடைபெறாத நாட்களே இல்லை என்ற அளவிற்குப் பள்ளிக்குழந்தைகள், பெண்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், அரசுப்பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் என யாருக்கும் பாதுகாப்பற்ற கொடுஞ்சூழல் நிலவுகிறது. சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழும் அளவிற்கு திமுக ஆட்சியில் தமிழ்நாடு சமூக விரோதிகளின் கூடாரமாகிவிட்டதுதான் பேரவலம்.

ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கு முன்விரோதம்தான் காரணம் என்ற தமிழ்நாடு காவல்துறையின் விளக்கம் வியப்பளிக்கிறது. முன்விரோதம் ஏற்படக் காரணம் சாராய விற்பனைதானே? அரசிற்கு அவப்பெயர் ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்று காவல்துறை நினைத்தால் குற்றத்தைத் தடுக்க முனைய வேண்டுமே தவிர, குற்றம் நடைபெற்றதற்கான காரணத்தை மறைக்க முயலக் கூடாது.

ஆகவே, திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத கள்ளச்சாராய விற்பனையைத் தடுத்து நிறுத்த காவல்துறையைத் தன்னுடைய நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இனியாவது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், 50 இலட்ச ரூபாய் துயர் துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

Tags:    

Similar News