பத்ம விருது வென்றவர்களுக்கு ராஜ்பவனில் பாராட்டு விழா
- தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் பத்ம விருதுக்கு தேர்வாகினர்.
- அவர்களுக்கு கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாராட்டு விழா நடைபெற்றது.
சென்னை:
இந்தியாவின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள் ஆகும். இவை பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இதற்கிடையே, 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த 25-ம் தேதி அறிவிக்கப்பட்டன. இதில், மத்திய அரசால் வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்துக்கு அறிவிக்கப்பட்டது.
அதேபோல், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது உட்பட 5 விளையாட்டு வீரர்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கிண்டி ராஜ்பவனில் இன்று பாராட்டுவிழா நடைபெற்றது.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பொன்னாடையும், கேடயமும் வழங்கி கவுரவித்தார்.
நடிகர் அஜித் கார் ரேசில் ஈடுபட்டு வருவதாலும், கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனிப்பட்ட காரணங்களாலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.