தமிழ்நாடு

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைப்பவர் செங்கோட்டையன் - ஓ.பன்னீர் செல்வம்

Published On 2025-02-19 12:19 IST   |   Update On 2025-02-19 12:39:00 IST
  • கட்சியின் விசுவாசமிக்க தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் உள்ளனர்.
  • ஆர்.பி.உதயகுமாருக்கு எல்லாம் பதில் சொல்ல நான் தயாராக இல்லை.

கோவை:

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் எதையும் எதிர்பார்க்காமல் எம்ஜி.ஆர். காலத்தில் இருந்து கட்சிக்காக உழைப்பவர். கட்சிக்காக பல நிலைகளில் இருந்து நானும், அவரும் இணைந்து பணியாற்றி உள்ளோம். அந்த வகையில் எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்கு உழைக்க கூடிய ஒரு உன்னத தொண்டராக தான் அவர் இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போன்றவர்களுக்கு எல்லாம் எந்த நேரத்திலும் நான் பதில் சொல்ல தேவையில்லை. அவர் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை மக்கள் கவனித்து கொள்வார்கள்.

கட்சி இணைய வேண்டும் என்பது அனைவருடைய கருத்தாகவும் இருக்கிறது. அ.தி.மு.க.வில் புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியின் விசுவாசமிக்க தொண்டர்கள், கட்சி இணைய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். கட்சி மீண்டும் இணைந்தால் தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு செய்த சேவையை, நலப்பணிகளை எண்ணி பார்க்கிறார்கள். மக்களும் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினர் வாக்குகளை பெற தவறி விட்டார்கள். 7 தொகுதிகளில் டெபாசிட் தொகை இழந்தனர். 13 தொகுதிகளில் 3-ம் இடத்தில் இருக்கிறார்கள்.

அ.தி.மு.க. தொண்டர்களின் உரிமையை மீட்கின்ற குரலாக இருக்கின்ற நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் மக்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிப்பதற்காக தான் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் நான் போட்டியிடும் சூழல் ஏற்பட்டது. அந்த தொகுதியில் என்னை யாரெல்லாம், எப்படியெல்லாம் தோற்கடிப்பதற்கு சதி செய்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு 3 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர். பதிவான வாக்குகளில் 33 சதவீத வாக்குகள் எனக்கு கிடைத்தது.

இதில் இருந்து மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்து இருக்கிறோம். அவர்கள் இன்றைக்கு நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத பய உணர்வுடன் இருக்கிறார்கள். பிரிந்து இருக்கின்ற அ.தி.மு.க. சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது தான் உண்மையான கருத்து ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News