இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அதிகம் நடக்கும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிய தி.மு.க. - ஓ.பி.எஸ். கடும் கண்டனம்
- மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.
- பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை.
சென்னை :
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதனை விலங்கினின்று வேறுபடுத்திக் காட்டுவது ஒழுக்கமே என்று சொன்னால் அது மிகையாகாது. 'ஒழுக்கம் விழுப்பம் தரும்', 'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை' போன்ற சான்றோர் வாக்குகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. உலகப் பொதுமறையாம் திருக்குறளில் ஒழுக்கமுடைமை, அறன் வலியுறுத்தல், சான்றாண்மை போன்ற அதிகாரங்களில் ஒழுக்கத்தை வலியுறுத்தி இருக்கிறார் திருவள்ளுவர். ஆனால், ஒழுக்கம் என்றால் என்ன விலை? என்று கேட்கக்கூடிய அவல நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது.
நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 17-வயது சிறுமி எழு கல்லூரி மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள நிலையில், நேற்று திருப்பூர் மாவட்டத்தில், சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு செல்வதற்காக கணவன் மற்றும் குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்களை, பனியன் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கை வார்த்தைக்கூறி அவர்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்திமுனையில் அந்தப் பெண்ணை மிரட்டி, அவரது கணவர் மற்றும் குழந்தை கண் முன்னே மூன்று வட மாநில வாலிபர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆசிரியர்களே மாணவியரை வன்கொடுமை செய்யும் கொடுமைகள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகளுக்குக் காரணமாக விளங்குவது ஒழுக்கமின்மை. இந்த ஒழுக்கமின்மைக்கு முக்கியக் காரணம் அமோக மது விற்பனையும், அளவுக்கு அதிகமான போதைப் பொருட்கள் நடமாட்டமும் தான். மது விற்பனை படிப்படியாக குறைக்கப்படும் என்று சொல்லிக் கொண்டு மதுவை ஊக்குவிக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. மது விலக்குத் துறையை மது ஊக்குவிப்புத் துறையாக தி.மு.க. அரசு மாற்றிவிட்டது. இது தவிர, போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நிறமையற்ற அரசாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறது.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, தமிழ்நாட்டு மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவியரின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. யார் எப்போது தாக்கப்படுவார்கள் என்று தெரியாத அலங்கோல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது. மக்களுக்கான பாதுகாப்பினை, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய எவ்விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் தி.மு.க. அரசு எடுக்கவில்லை. பெண் காவலர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் கொடூரம் தமிழ்நாட்டில் இருக்கிறது.
சட்டம் -ஒழுங்கை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர், இனியாவது பாராட்டு மழையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, கள யதார்த்தம் என்ன என்பதை கேட்டுத் தெரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை வேரோடு அழிக்கவும், மது விலக்கை நடைமுறைப்படுத்தவும், பாலியல் வன்கொடுமையாளர்கள்மீது பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்கவும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.