திண்டிவனம் அருகே அரசு பஸ் டிரைவர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
- மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த நடுவனந்தல் கிராமத்தில் அரசு பஸ் டிரைவர் வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவணந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (40) அரசு பஸ் டிரைவர். இவர் வழக்கம்போல் பணிக்கு சென்ற நிலையில் இவரது மனைவி கலைச்செல்வியும் நேற்று மாலை உடல் நிலை சரியில்லாததால் திண்டிவனம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட மர்மநபர் ஒருவர் வீட்டை திறந்து வீட்டில் இருந்த 40 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளார். இந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த கலைச்செல்வி வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் பீரோவில் இருந்த 40 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் சந்தேகப்படும்படியான நபர் ஒருவரின் ஊருக்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. அந்த நபரின் செல்போன் மூலமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டிவனம் அருகே பட்டப்பகலில் வீட்டில் இருந்த 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.