அ.தி.மு.க.வில் நிலவும் சலசலப்புகளை தாண்டி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார்- வைகைச்செல்வன்
- தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் வருகிற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார்.
- எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாளை கொண்டாடுவது தொடர் பாக ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் அ.தி.மு.க. இலக்கிய அணிஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இலக்கிய அணி மாநிலசெயலாளரான முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி மற்றும் கோகுல இந்திரா, இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர்கள் இ.சி சேகர், மலர்மன்னன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து தெரு முனை பிரசாரங்களை மேற்கொண்டு 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்து எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்றும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக வைகைச் செல்வன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் தி.மு.க. அரசு மீது மக்களுக்கு நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்துக் கொண்டே செல்வதால் 2026-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி கட்டிலில் அமரும். இந்த ஆட்சி எப்பொழுது வீட்டுக்குப் போகும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆந்திர மாநிலத் தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் தோல்வியை தழுவியது போல தமிழகத்திலும் மு.க.ஸ்டாலின் வருகிற தேர்தலில் நிச்சயம் தோல்வியை தழுவுவார். அவருக்கு கடும் பின்னடைவு ஏற்படும். அ.தி.மு.க.வில் சின்ன சின்ன சலசலப்புகள் உள்ளன. இதற்கெல்லாம் அஞ்சாத இயக்கம்தான் அ.தி.மு.க. அடிக்க அடிக்க தான் பந்து மேல் எழும்பும். அறுக்க அறுக்கதான் வைரம் மின்னும். அதைப் போன்று அ.தி.மு.க.வும் வரும் காலங்களில் நிச்சயம் வேகம் எடுக்கும்.
எடப்பாடி பழனிசாமி 2026-ல் முதலமைச்சராக வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க. செம்மையுடன் செயல்பட்டு வருகிறது .
இவ்வாறு அவர் கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் அ.தி.மு.க.வில் சேர்வதற்கு இன்னும் ஆறு மாத காலம் காத்திருக்க வேண்டும் என அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கூறி இருப்பது தொடர்பாகவும் மீண்டும் ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா என்பது பற்றியும் வைகை செல்வனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.