மார்த்தாண்டம் அருகே பயணிகளுடன் ஓடைக்குள் இறங்கிய அரசு பஸ்
- எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது.
- பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது
மார்த்தாண்டம் :
மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு, கொல்லஞ்சி வழியாக இனையம் செல்லும் அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. கொல்லஞ்சி செல்லும் பாதையில் பஸ் சென்ற போது எதிரே லாரி வந்துள்ளது. எனவே பஸ்சை டிரைவர் சற்று ஓரமாக ஓதுக்கினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது. இதனால் பஸ் ஓடைக்குள் இறங்கியது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் இன்றி தப்பினர்.
விரிகோடு மீன்கடை முன்பு பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்காததால் பல்வேறு விபத்துகள் அந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது. மேல விரிகோடிலிருந்து தபால் நிலையம் வரை கொஞ்ச தூரத்திற்கு மட்டும் சாலை போடாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் சாலை போடப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.