வீட்டை சூறையாடியதால் போலீசில் புகார் பழிக்கு பழியாக ரவுடியை கொன்றேன் - கைதான வாலிபர் வாக்குமூலம்
- சிவசங்கர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
- சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களையும் ஆய்வு செய்தனர்
நாகர்கோவில் :
நாகர்கோவில் பட்டக சாலியன்விளை பெருமாள் நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 29). டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது கோட்டார், நேசமணி நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
மேலும் கோட்டார் போலீஸ் நிலைய ரவுடிகள் பட்டியலிலும் இவரது பெயர் உள்ளது. இவருக்கும், பீச் ரோடு பெரிய விளையை சேர்ந்த சிவசங்கர் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று பீச்ரோடு பகுதியில் ரஞ்சித் நின்ற போது அங்கு வந்த சிவசங்கர் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னார்கள். இது தொடர்பாக சிவசங்கரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிவசங்கர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆண்டு ரஞ்சித்தின் வீட்டுக்குள் நுழைந்து அவருடைய வீட்டை சூறையாடியது தொடர்பாக என் மீது நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. இதனால் எனக்கும், ரஞ்சித்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று ரஞ்சித் என்னை போன் மூலமாக தொடர்பு கொண்டு அழைத்தார். இதையடுத்து நான் பீச்ரோடு பகுதிக்கு வந்தேன். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த ரஞ்சித்தை தடுத்து நிறுத்தினேன். அப்போது அவர் என்னிடம் வாய் தகராறில் ஈடுபட்டார். எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே என் மீது ரஞ்சித்தின் தாயார் கொடுத்த புகாரினால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தேன். இதற்கு பழிக்கு பழியாக அவரை கத்தியால் குத்தினேன். பின்னார் அங்கிருந்து சென்று விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து போலீசார் கொலை நடந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளையும் ஆய்வு செய்தனர். கைது செய்யப்பட்ட சிவசங் கரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.