கருங்கல் அருகே தொழிலாளி வீட்டில் வெண்கல குத்துவிளக்கு திருட்டு
- திருடிய நண்பர்கள் 2 பேர் கைது
- திருட்டுபோன குத்துவிளக்கும் மீட்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள மாங்கரை கோட்டவிளையை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 43). கூலித்தொழிலாளி.
இவரது நண்பர்கள் செல்வின் (40) மற்றும் மரிய சேவியர் (47). இருவரும் அடிக்கடி விஜயகுமார் வீட்டிற்கு வந்து செல்வார்கள். அவரது வீட்டில் சுமார் 7 கிலோ எடையுள்ள பிரமாண்ட வெண்கல குத்து விளக்கு உள்ளது.
சம்பவத்தன்று விஜயகுமார் வீட்டிற்கு அவரது நண்பர்கள் செல்வின், மரிய சேவியர் இருவரும் வந்தனர். அவர்கள் சிறிது நேரம் வீட்டில் இருந்து விட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு விஜயகுமார் வீட்டின் உள் அறையில் பார்த்த போது அங்கிருந்த வெண்கல குத்துவிளக்கை காணவில்லை.
மாயமான குத்து விளக்கின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். எனவே அவர் இதுபற்றி கருங்கல் போலீசில் புகார் செய்தார். அதில் நண்பர்கள் இருவரும் வீட்டிற்கு வந்துவிட்டு சென்ற பின்னரே குத்து விளக்கு காணாமல் போனதாகவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் விஜயகுமார் வீட்டில் குத்துவிளக்கை திருடிச் சென்றது அவரது நண்பர் கள் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து திருட்டுபோன குத்துவிளக் கும் மீட்கப்பட்டது.